நான் தேவதை அல்ல ‘‘என் அதிர்ஷ்ட நாயகன், சூர்யா’’ நடிகை தமன்னா சொல்கிறார்

                                                                                                                                                                                  
‘‘நான், அதிர்ஷ்ட தேவதை அல்ல. உண்மையிலேயே அதிர்ஷ்ட நாயகன் சூர்யாதான்’’ என்று நடிகை தமன்னா கூறினார்.

சினிமா படவிழா
பி.வி.பி.சினிமா நிறுவனம் தயாரித்து, நாகார்ஜுன்–கார்த்தி–தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘தோழா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில், நடிகர் சூர்யா கலந்து கொண்டு பாடல்களை
வெளியிட்டார்.

நடிகர்கள் நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தமன்னா பேசியதாவது:–

அதிர்ஷ்ட நாயகன்
‘‘நான் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதாகவும், எனவே என்னை அதிர்ஷ்ட தேவதை என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். நான், அதிர்ஷ்ட தேவதை அல்ல. உண்மையிலேயே அதிர்ஷ்ட நாயகன், சூர்யாதான். அவரை என்னுடைய அதிர்ஷ்ட நாயகன் என்று சொல்லலாம்.
‘பாகுபலி’ படவிழாவில் சூர்யா கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். அந்த படம் ரூ.600 கோடி வசூல் செய்தது. இப்போது நான் நடித்திருக்கும் ‘தோழா’ படத்தின் பாடல்களையும் சூர்யா வெளியிட்டு இருக்கிறார். இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.’’
இவ்வாறு தமன்னா பேசினார்.

சூர்யா–கார்த்தி
சூர்யா பேசும்போது, ‘‘நாகார்ஜுனுடன் நான் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை. என் தம்பிக்கு (கார்த்திக்கு) அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்த வகையில், எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்றார்.

கார்த்தி பேசும்போது, ‘‘2 கதாநாயகர்கள் படங்களில் நான் நடிக்க யோசிப்பேன். யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்? என்ற சந்தேகம் எழும். ‘தோழா,’ 2 கதாநாயகர்களின் படம் என்றதும், இன்னொரு கதாநாயகன் யார்? என்று கேட்டேன். நாகார்ஜுன் என்று சொன்னதும், உடனே நடிக்க சம்மதித்தேன். அவர் படங்களை பார்த்து ரசித்தவன், நான். படப்பிடிப்பின்போது அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை சொன்னார்’’ என்றார்.

நாகார்ஜுன்
நாகார்ஜுன் பேசும்போது, ‘‘சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இங்கு வளர்ந்தவன். இங்குள்ள பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். கார்த்தி என்னை, ‘‘அண்ணா’’ என்றுதான் அழைப்பார். அவரிடம் இருந்து தமிழ் வசனங்களை பேச கற்றுக் கொண்டேன். படத்தின் கதைப்படி, என் கதாபாத்திரம் நாற்காலியிலேயே இருக்கும். என் கை–கால்களை கட்டிப்போட்டு விட்டு, எனக்கு முன்னால் கார்த்தியும், தமன்னாவும் ‘டூயட்’ பாடிக் கொண்டிருப்பார்கள். கார்த்தியை பார்க்க பொறாமையாக இருந்தது’’ என்றார்.

கலந்து கொண்டவர்கள்
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் சிவகுமார், மனோபாலா, உதயா, பிரேம்குமார், ஸ்ரீமன், நடிகைகள் குட்டி பத்மினி, லலிதகுமாரி, பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், சசிகாந்த், டைரக்டர்கள் சந்தானபாரதி, சுதா கோங்ரா, வம்சி பி, இசையமைப்பாளர் கோபி சுந்தர், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, வசனகர்த்தா ராஜுமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பரம் வி.பொட்லூரி வரவேற்று பேசினார். விழாவையொட்டி நடிகைகள் பூர்ணா, சுஜா வாருணி ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

Post a Comment

Previous Post Next Post