செங்கலடி கணபதிப்பிள்ளை புதிய நகரில் அமைந்துள்ள செங்கலடி மீகாவேல் பாலர் பாடசாலையானது முன்பள்ளிக் கல்வித்துறையில் தனது 19வது ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்துள்ளது. செங்கலடி பிரதேசத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு முன்பள்ளியாக இப்பாடசாலை விளங்குகின்றது. இவ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 19வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுடன் இணைந்து 2025ம் வருடம் தரம் - 01 இற்குச் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், முன்பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வும் நேற்று 21.11.2024ம் திகதி நேற்று இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி. பௌலீனா கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. ச. வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் செங்கலடி - 01 அபிவிருத்தி உத்தியோகத்தர், செங்கலடி - 01 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. கு. ஜெயப்பிரியன் மற்றும் ஓசியன் ஸ்டார் அமைப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் முன்பள்ளியில் கல்வி பயிலும் சிறார்களின் நடன நிகழ்வுகள் நிகழ்வை மேலும் அலங்கரித்தது. சிறுவர்கள் எதுவித தயக்கமுமின்றி தங்கள் திறமைகளை மேடையேற்றியமை மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்தது. நிகழ்வில் சிறார்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டு இரசித்தமை விசேட அம்சமாகும்.
நிகழ்வில் சிறார்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டு சிறார்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment