தமிழ்த்தொண்டு

தமிழ்த்தொண்டு

மிழ் வளர்த்த முடிமன்னராகிய சேர, சோழ, பாண்டியருங் கழிந்து போயினர். அகத்தியனாரை முதலாகக் கொண்ட புலவர் பெருமக்கள் குழுமியிருந்து தமிழாராய்ந்த முச்சங்கங்களும் அழிந்து போயின. செல்வத்தில் வளர்ந்த சீமாட்டி அல்லலுற்றலைகின்ற தன்மைபோலத் தமிழ்மாது பொலிவிழந்து தோன்றுகின்றாள். இவளுக்குத் தொண்டுபுரிய முன்வருவார் யாவருளர்? இப்பூமண்டலத்தில் இப்பொழுது வழங்குகின்ற மொழிகள் தோற்று முன் தோன்றிய தமிழ்மொழியானது

இன்றும் நிலைபெற்று நின்று இரண்டுகோடி மக்களுடைய வழக்கு மொழியாக விளங்குகின்றது. தமிழர் உலகத்தின் பல பாகங்களிலும் வசித்து வருகின்றார்கள். வாணிகத்திலும் தொழிற்றுறைகளிலும் ஈடுபட்டவர்களாய்த் தென்னாபிரிக்கா, மத்திய அமெரிக்கா, மலாயா, சிங்கப்பூர் முதலிய பிற தேசங்களிலும் பலவகை இயற்கை வனப்பு வாய்ந்த நமது தாய்நாடாகிய இவ்விலங்கைத் தீவிலும், திருவேங்கடந் தென் குமரியெல்லையாகவுடைய பழந்தமிழ் நாட்டிலும் தமிழர் வசித்து வருகின்றனர். இரண்டு கோடி மக்களால் வழங்கப்பட்டு வருகின்ற இம்மொழி உயிருடைய மொழியென்பதை மறுக்கவல்லார் யாவர்? தமிழ் அழிந்துபோகவில்லை. உயிருடனிருக்கிறது. அரசியல் மாற்றங்களினாலும் பிற மொழியாட்சியினாலும் தன்னியல்பிற் குன்றிச் சோர்வினாலயர்ச்சியடைந்த தமிழ்மாது மீண்டும் விழித்தெழுந்த சிறப்பினைக் கண்ட பாவலரும், நாவலரும் இவளுக்குத் திருப்பள்ளியெழுச்சி கூறுகின்றனர். காரிருட்காலங் கழிந்து விட்டது. புதிய ஊக்கத்தோடு எழுந்த நம் அன்னையினுடைய அடியினை மலருக்கு வணக்கஞ் செலுத்துவோமாக. 

வாழ்க்கையினது மர்மத்தையறிந்து கொள்ளுவதற்கு உபயோகமான கல்வியே கல்வியெனப்படுவது. வாழ்க்கையின் இரகசியங்களை ஊடுருவி நோக்குமாற்றல் உத்தம கவிகளுக்கு இருப்பதுபோலப் பிறருக்கில்லை. புறநானூறென்றும் சங்கத் தொகை நூலிலும், சீவகன் சரிதையிலும், கம்பராமாயணத்திலும் அழகுபெற மனத்திலெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு அவற்றின் வழிநின்று வாழ்க்கையை நடத்துபவன் உயர்நிலையடைவான் என்பதற்கு ஐயப்பாடில்லை. கலைமகளுடைய அருளினைப் பெற்ற கவிவாணர் நான்முகத் தேவனைப் போலப் புத்துருவங்களை யாக்க வல்லவர்கள். கலைநூல்களை யோதியுணர்ந்த கல்விமான் இப்புத்துருவங்களைத் தெளிவாக நோக்கி மனத்துக்கதனை யமைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை அவற்றுக்கு நேராகச் சீர்படுத்துகின்றான். நோக்கம் உயர்வடையச் செய்கை உயர்வடையும். செய்கை உயர்வடைய வாழ்க்கை உயர்வடையும். 

வாரீர் சகோதரர்களே! நாமிவ்வுலகத்தில் ஏனைய தேசத்தாரோடு ஒத்த பான்மையினராய்ச் சிறப்புறவேண்டுமாயின், நாம் நமது தாய்மொழிக்குத் தொண்டு புரிதலை மேற்கொள்ள வேண்டும். 

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியி லயற்றவேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமையில்லைத்

திறமான புலமையெனிற் பிறநாட்டோ

ரதை வணக்கஞ் செய்ய வேண்டும்

என ஆற்றல்சான்ற கவியரசராகிய சுப்ரமணிய பாரதியார் வற்புறுத்திக் கூறுகின்றார். தமிழ் பழமை வாய்ந்தது. தொண்டர் நாதனைத் தூதிடைப் போக்கியது என்றின்னை பழங்கதைகளை நமக்குள்ளே பேசிக் கொள்வதில் எய்துததற்குரிய பிரயோசனம் யாதுமில்லை. நாற்றிசை மக்களும் நமது நாகரிகத்துக்கு ஏற்ற முரைக்கவேண்டுமென நாமெண்ணுவோமாயின் தமிழ்நூல் பொதிந்த கருவூலத்தினுள்ளே யமைந்து கிடக்கும் நன்மணிகளையெடுத்து அவற்றினது மதிப்பை யாம் பிறருக்கு உணர்த்துதல் வேண்டும். பிறநாட்டாரிடத்திலுள்ள அரிய பெரிய விஞ்ஞான நூல்களையும் பிறவற்றையும் மொழிபெயர்த்துத் தமிழுக்கு உரிமையாக்க வேண்டும். அனைவருமெளிதிலுணர்ந்து கொள்ளத்தக்க இலகுவாகிய தமிழ்நடையில் உயிர்க்குறி பயக்;கும் உயர்ந்த சாத்திரங்களை எழுதுவித்தல் வேண்டும். தேகத்துக்கு வலிமையும் மனத்துக்கு உறுதியுந் தரத்தக்க எண்ணங்கள் தமிழ் நாடெங்கும் பரவுவதற்கு முயற்சித்தல் வேண்டும். 

ஒரு தேசத்தில் வாழுகின்ற மக்கள் தமது அரசியல் நிலை, பொருளாதார நிலை, சமூக நிலை என்பவற்றைச் சீர்படுத்திக் கொள்ள முயல்வாராயின் முதலிலே தாமெய்த வேண்டுமென்றெண்ணுகிற நிலையை அவர் தம் மனத்திடையே தெளிவுற உருகப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இது உத்தமக் கவிகளுனுடைய கருத்தினை நுனித்துநோக்கி அமைக்குந்தரத்தது. இந்நாளில் நடந்து வருகின்ற நாகரிக வழக்கங்களுக்கும், பல தேசத் தொடர்பினுக்கும் இயைபாகும்படி நித்தியமான உண்மைகளை மக்களுடைய உள்ளத்திற் படியும்படியாக எடுத்துச் செல்லும். ஆற்றலுடையவனே தன்னுடைய நாட்டுக்குப் புத்துயிரளிக்கவல்ல உண்மைக் கவியாவான். இத்தகைய ஒரு கவியைத் தமிழ்நாடு பெற்றது இந்நாடு செய்த பெருந்தவப்பயனேயாகும். கவியரசராகிய சுப்ரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நீத்துப் பல வருடங்களாகவில்லை. இதற்கிடையில் அவருடைய கவி தேசமெங்கும் செறிந்து நாட்டிலுள்ள மக்களுக்குப் புத்துயிரளித்து வருகின்றது. இத்தகைய கவி சிரேட்டர்கள் இன்னும் பலரை இந்நாட்டில் உதிக்கச் செய்யுமாறு உலகமாதாவாகிய பராசக்தியை வேண்டிக் கொள்வோமாக.

வடமொழியலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல்கள் மிகப் பலவிருக்கின்றன. நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை என்கின்ற என்கின்ற வேறு வகைப்பட்ட தத்துவ விசாரணை நூல்களை மேல்நாட்டாசிரியர்கள் தம்மொழியில் பெயர்த்தெழுதித் தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர். 

வேத வேதாந்தங்களுக்கு பொழிபெயர்ப்பும் உரையும் ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகளிலுண்டு. தமிழிலோவென்றால் சூத்திரருக்கும் பெண்களுக்குத் தகவுடையனவெனக் கூறப்பட்ட சில புராணக்கதைகள் மாத்திரமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிற்பம், ரசாயனம், ஆயுர்வேதம், அர்த்தவேதம், தநுர்வேதம், காந்துருவேதம், கணிதம், தருக்கம் என்றின்ன பலவாய துறைகளிலே கடல்போல் விரிந்து கிடக்கின்ற சாத்திரங்களைத் தமிழிலே மொழிபெயர்த்தெழுதினால் அதனால் விளையக்கூடிய நூல்களைத் தமிழிற் பெயர்த்தெழுத முயல்வது சிறந்த தமிழ்த் தொண்டாகும். 


Post a Comment

Previous Post Next Post