இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கைஇ மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன்
இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிகரையும் வென்றான்.
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு,. இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான 'மஹா வம்சமும்' கூறுகிறது.
ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டியஇ சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.
இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.
சோழப் பேரரசின் வீழ்ச்சி
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன்இ இரண்டாம் இராஜராஜன்இ இரண்டாம் இராஜாதிராஜன்இ மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராஜராஜன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராஜேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராஜராஜனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.
Post a Comment