குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
குழந்தைகள் தமது அடிப்படைத் தேவைகளான உடல் தேவைகளையும் உளத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டி உள்ளது. ஓர் ஆரோக்கியமான பிள்ளையாக வளர வேண்டும் எனில் உடல், உளத் தேவைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். உடல் தேவைகள் மட்டுமன்றி உளத் தேவைகளும் முக்கியமானவை. அன்பு, பாசம், சுதந்திர உணர்வு, துணிவாகச் செயலாற்றல் முதலியவை பிள்ளை இடத்தே தீவிரமாகக் காணப்படுகின்றன. இத்தேவைகளை பூர்த்தி செய்வதாக ஆரம்பப் பிள்ளைப் பருவப் பள்ளிகள் செயலாற்றுகின்றன.
குழந்தைகளின் இயக்க வளர்ச்சியை ஊக்குவிப்பதில் விளையாட்டுக்கள் முதன்மை பெறுகின்றன. மனவெழுச்சி வளர்ச்சிக்கும் முன்பருவக்கல்வி அவசியம். குழந்தைகளின் இயல்பூக்கங்களை சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் வெளியிடவும் வாய்ப்புக்களை வழங்குவதாக அமைகின்றன. குழந்தைகளின் அறிவுத் தாகத்தை தனிப்பதிலும் ஆர்வத்தை அதிகப்படுத்துவதிலும் ஆரம்பப் பிள்ளைப் பருவ பள்ளித் திட்டமும் கருவிகளும் உதவவேண்டும். இப்பருவக் கல்வி ஆக்க வளர்ச்சியையும் கற்பனா சக்தியையும் சிறந்தவற்றை ரசிக்கும் உணர்வையும் கொண்டவராக இருக்க வேண்டும். அதற்கேற்ப செயல்களையும் வாய்ப்புக்களையும் வழங்குபவையாக ஆரம்பப் பிள்ளை பருவப் பள்ளியின் நோக்கமாக உள்ளது.
குழந்தைகளின் பழக்க வழக்கங்களை ஊக்குவித்தல்
பழக்கவழக்கங்கள் சிறுவயது முதலே ஏற்படத் தொடங்குகின்றன. உணவு உண்ணும் பழக்கம், உறங்கும் பழக்கம், சிறுநீர் கழிக்கும் பழக்கம், ஆரோக்கியமான சுத்தமான பழக்கங்களை பின்பற்றல், குறித்த நேரத்தில் தங்களது கடமைகளை செய்யும் பழக்கங்கள் முதலானவை இப்பருவத்திலே வளர்க்கப்படல் வேண்டும். இந்நோக்கங்களை அடைவதில் முன்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது. முன்பள்ளிகளில் இத்தகைய பழக்கங்களைப் பயிற்றுவிக்கும் நோக்கங்களைக் கொண்டதாக செயற்படுதல் அவசியம்.
குழந்தையின் முழு வளர்ச்சியை ஊக்குவித்தல்
ஒரு பிள்ளையின் முழு வளர்ச்சி என்பது உடல், உள்ளம், மனவெழுச்சி, அறிவு, மொழி, சமூகம் சார்ந்ததாக அமைதல் அவசியம். இத்தகைய வளர்ச்சிகளை பிள்ளைகளிடத்திலே ஏற்படுத்தி அவர்களை பரிபூரணமாக முன்பள்ளிகள் விளங்குகின்றன.
குழந்தைகளை அடுத்த நிலைக்கு தயாராக்குதல்
ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி ஓர் அத்திவாரக் கற்கை ஆகும். இது பிள்ளைக்குப் பயன் உள்ளதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில் தான் அதன் ஒவ்வொரு செயற்பாடும் அடுத்த கட்டங்களுக்கு வழிப்படுத்தும். மனித வளர்ச்சி வரலாறு ஒவ்வொரு கட்டங்களாக மாறி வருகின்றன. இவற்றுக்கு எல்லாம் ஆதாரம் இப்பருவ கல்வி முறைமையே ஆகும். குழந்தைக்கு ஊட்டப்படும் ஒவ்வொரு விடயங்களும் அடுத்த கட்ட நகர்வுக்கு ஓர் படியாக இருந்து வருகின்றன.
ஆரம்பப் பிள்ளைப்பருவ கல்வியின் நோக்கங்களாக மேல்வருவன பொதுவாக குறிப்பிடப்படுகின்ற போதும் நாட்டுக்கு நாடு வெவ்வேறு விதமான நோக்கங்களை வரையறுத்து அவற்றினை அடைய முயற்சித்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
Post a Comment