'தன்னை மறத்தல்' என்பது பெரிய சங்கதிதான். தன்னை மறந்த நிலையில் ஒருவர் செய்கின்ற செயலும் பெரிய சங்கதிதான்.
இந்த நியதிக்குச் சரவணமுத்துவே இதோ 'சாலுங் கரி' யாக இருக்கின்றான். அவனோடு கூட, நாகண்டாப் போடியையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
வயற்காட்டுத் தெம்மாங்குக் காற்றிலே குதி போட்டு மிதந்தது...
வரம்போ தலகாணி, வாய்க்காலோ பஞ்சு மெத்த ஓ....
நாகங் குடை பிடிக்க, நற்பாம்பு தாலாட்ட ஓ....
சீறிச்சோ நாகமது, சிவந்ததோ கண்ணிரண்டும் ஓ....
பாம்பால சும்மாடு படத்தால மொக்காடு ஓ....
வீசினாள் கையை, விரித்தாள் சடைமுடியை.... ஓ...
கொக்கும் பறக்குதடா, குளக்கரைக்கும் அப்பாலே... ஓ....
தன்னை மறந்த உணர்ச்சி வேகத்தோடு தெம்மாங்குக்கு இசை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தான் சரவணமுத்து
இனிமையான வைகறைப் பொழுதாலோ, வயிற்றைக் குளுமையாக நிறைந்திருந்த தண்ணிச் சோற்றாலோ வலுவோடு வேலை செய்ததால் ஏற்பட்ட தெம்பாலோ மட்டும் அவனுக்கு இந்த உற்சாகம் ஜனிக்கவில்லை.
அதற்கு வேறு காரணமும் இருந்தது.
அவள்...
அவனை இயக்கும் ஆதார சுருதி – நாகாத்தை சற்று நேரத்துக்கு முன்னர்தான் சங்கீதத்தை அவன் செவிகளில் பெய்து விட்டு கெண்டைக்கால் வயற்சுழியில் புதையப் புதைய லாகவ நடை போட்டுச் சென்றாள்.
சுழியில் புதைந்த அவளுடைய ஒவ்வோர் அடியும், சரவணமுத்துவின் பம்மிப் பருத்த மார்பைத் தாண்டிக் கொண்டு அவன் இதயத்தின் மீது மலர்த்தடத்தைப் பதித்து விட்டிருந்தது. களுக், களுக் என்ற இன்ப சுருதியோடு அவள் அடிபெயர்த்து வைத்த ஒய்யாரம், சிற்சில சமயம் சுழியில் ஆழப் புதையுண்ட தன் கால்களை அவள் மீட்பதற்குச் செய்த பிரயத்தனம், அதிலிருந்து பிறந்த பரதம். கை என்ற வாழைக் குருத்து ஒய்யார லயத்தோடு வீசித் துவண்ட கோலம். அதில் குதிபோட்ட கண்ணாடி வளையல்களின் கலீர், கலீர் என்ற சங்கீதம். பனை ஓலைப் பெட்டியைத் தாங்கியிருந்த அந்தத் தலையின் கலைக்கோலம், எதேச்சையாக நெற்றியில் விழுந்து கிடந்த கூந்தல் இழைகள், அள்ளி முடித்திருந்த கொண்டைக்குத் திருஷ்டி பட்டுவிடாமல் கவசம் போல் காத்து நின்ற முக்காடு. தளிர் மேனியை இறுக்கிப் பற்றியிருந்த சட்டை பாதி வயிறு வெளியில் தெரிய முந்தானையை இடுப்பில் அள்ளிச் செருகியிருந்த காம்பீர்யம் இவையெல்லாம் சேர்ந்து சரவணமுத்துவைப் பாடு பாடு என்று பணித்தன.
பாடிவிட்டான்.
நாகாத்தை அவன் பார்வையிலிருந்து மறைத்து விட்டாள். அதுவரை இடுப்பில் வைத்திருந்த கையை எடுத்து ஓய்ந்திருந்த மண்வெட்டிக்கு வேலை வைத்தான் சரவணமுத்து.
மண்வெட்டிக்கு மட்டும்தான் அவன் வேலை வைத்தானா? மனத்துக்கும் சற்று வேலை வைத்தான்.
அடுத்தநாள் இரவு நடைபெறப்போகும் சுபத்திரை கல்யாணம் அவனுடைய நெஞ்சுக் களரியில் கூத்தாடியது. கூத்தில் அவனுக்குத் தரப்பட்ட பாத்திரம் அர்ஜூனன்! தன்னை ஒரு நிஜ விஜயனாகவும், நாகாத்தையைச் சுபத்திரையாகவும் ஒப்பனை செய்து துள்ளியது அவள் உள்ளம். தான் வேலை செய்து கொண்டிருந்த மண்வெட்டியையே ஒரு கணம் பிடித்து விஜயனின் வில்லாக அதைப் பாவனை செய்து பார்த்துக் கொண்டான் சரவணமுத்து.
இந்த வீர நினைவுக்கு மத்தியில் வயிற்றைக் குமட்டும் ஒரு காட்சியும் படரத்தான் செய்தது சரவணமுத்துவுக்கு! அந்தக் காட்சியின் பாத்திரமான வேடன் நாகண்டாப் போடியையும் அவன் வாயிலிருந்து வீசும் சாராய நாற்றத்தையும் நினைத்த போது வயிற்றைக் குமட்டியது சரவணமுத்துவுக்கு.
சுபத்திரை கல்யாணத்தில் ஓர் உப காட்சியாக வரும் அர்ஜூனன் பாசுபதம் பெற்ற வரலாற்றில், சிவன் வேடனாக உருமாறி வில் விஜயனைப் பரீட்சிக்கின்றார். இந்தக் காட்சியில் வேடனாக வருபவன் நாகண்டாப்போடி இந்த வேட்டுவ நாகண்டானுக்கு நாகாத்தை மீது ஒரு கண் இருப்பது ஊரறிந்த ரகசியம். சரவணமுத்துவுக்கு இந்த ரகசியம் இப்பொழுது நினைவுக்கு வந்து அவன் உள்ளத்தில் அபசுரத்தை இசைத்தது.
சற்று முன்னால் தன்னுடன் பேசி விட்டுச் சென்ற நாகாத்தை கூட இந்த வேடன் விவகாரத்தைப் பற்றியும் நினைவுபடுத்தி, கெதியில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டு விட்டுச் சென்றிருந்தாள்.
சரவணமுத்து அதற்குச் சொன்ன பதிலும் அவனுக்கு இப்போ ஞாபகம் வந்து சற்று ஆறுதல் தந்தது.
நாளைக்குக் கூத்து இருக்கிறது. கூத்தில் சுபத்திரையைக் கல்யாணம் முடிக்கின்றான் அர்ஜூனன். அது முடிஞ்ச கையோடு இந்த சுபத்திரைக்கும் தாலி கட்டுகிறான் இந்த அரிச்சுன மகாராசன்!...
மனவயலைத் தோண்டிக் கொண்டிருந்த நினைவு மண்வெட்டியில் திடீரென்று ஒரு தடங்கல்.
நாகாத்தை பரக்கப் பரக்க ஓடி வந்து கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றத்தில் காணப்பட்ட கலவரம் சரவணமுத்துவை ஒருகணம் நிலைகுலைய வைத்துவிட்டது.
தலையில் கட்டியிருந்த சால்வையை அவிழ்த்து முகத்தில் ஊறியிருந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டான் சரவணமுத்து.
என்ன நாகாத்தா? போன கையோடு திரும்பி விட்டாய்?
நானாகத் திரும்பவில்லை. அந்த நாசமறுவான் தான் திருப்பி விட்டான்!
ஆர் நாகண்டானா?
அந்தப் புறக்கி தான். இவ்வளவு நாளாக வாய்ச் சேட்டையோடு அந்த வழிசல் விட்டிரிந்துச்சி. இப்ப கையைப் புடிச்சி இழுக்கிற மட்டில் வந்திற்று! என்று பதட்டத்துடன் கூறிய நாகாத்தா சற்று முன்னால் தனக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.
விஷயம் இதுதான்.
சரவணமுத்துவைச் சந்தித்து விட்டு, பரந்த அந்த வயல் வெளியைத் தாண்டி வந்து கொண்டிருந்தாள் நாகாத்தை.
சற்று முன்னம் சரவணமுத்து அவளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி, அவள் உள்ளத்தில், வளர்ந்து வரும் கதிர்பறியா வேளாண்மைப் பயிர்போல பசுமையாகத் தலையசைத்துக் கொண்டிருந்த வயல்வெளிக்குச் சற்றுத் தள்ளிக் காணப்பட்ட பற்றைக் காட்டின் மத்தியில் ஒரு கூட்டம் தென்னை மரங்கள். வயல் நீரில் தத்தித் திரிந்த பனையான் விரால் மீன்களைக் கொத்தி தின்ன எங்கிருந்தோ ஒரு கூட்டம் கொக்குகள் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தன.
தென்னங் கூட்டத்தின் மத்தியில் நாகண்டான் நல்ல நிறகலையில் விழுந்து கிடக்கின்றான். அவன் வாய் நானே அரிச்சுனன்டீ! நாராயணன் தங்கையே கேளும் பெண்ணே! என்ற சுபத்திரை கல்யாணக் கூத்துப் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது. அவனுக்குப் பக்கத்தில் சரிந்து கிடந்த ஒரு முழுசில் கால்வாசிக்குக் குறைவாகச் சாராயம்.
காலையிலிருந்தே கேஸ் ஏற்றத் தொடங்கியிருக்கிறான்.
சரவணமுத்துவின் உறுதி மொழியிலும் அவன் சத்தம் போட்டுப் பாடிய அந்த வயற்காட்டுத் தெம்மாங்கிலும் தன்னைப் பறிகொடுத்து விட்டு வந்து கொண்டிருந்தாள் நாகாத்தை. இடையிடையே அந்தத் தெம்மாங்கின் அடிகளையும் வாய்க்குள் முணுமுணுக்க அவள் மறக்கவில்லை.
பாம் பால சும்மாடு, படத்தால மொக்காடு! வீசினாள் கையை விரித்தாள் சடை முடியை! அப்பப்பா! பெருமை அவளுக்குப் பிடிபடவில்லை.
தெம்மாங்கில் வர்ணிக்கப்பட்டபடி தன் கையை ஒருமுறை வீசிப் பார்த்துக் கொள்கிறாள் அவள்.
என்ன இது?
வீசிய அவள் கை திரும்ப அதன் நிலைக்கு வரவில்லை.
ஒரு வலுவான கரம் அவள் கரத்தை அழுத்திப் பிடித்து நிறுத்திக் கொண்டிருந்தது.
'ஆய்' என்று கத்தி விடுகின்றாள் நாகாத்தை. ஒரே ஒரு கணம். அதற்குள் அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு விடுகின்றாள். தெம்மாங்கின் இறுதி அடி பளிச் சென்று நினைவுக்கு வருகின்றது. விரித்தாள் சடைமுடியை...
அந்த இறுதி அடி ஆணையிட்டபடி விரித்தாள் தன் சடை முடியை!
தன்னை இறுகப் பற்றியிருந்த அந்த முரட்டுப் பிடியிலிருந்து ஒரு திமுறு திமுறினாள். விடுதலை! நாகாண்டான் நெரித்த நெரியில் அவள் குருத்துக்கை சிவந்து விடுகின்றது. கண்ணாடி வளையல்களும் நொருங்கி விடுகின்றன.
கைமட்டுமா சிவந்தது? கண்களும் தாம், நாகாண்டானின் கண்களும் சிவந்துதான் இருந்தன – போதையில்!
நாகாத்த இப்பதான் வாறியா? நாக்கு விழுந்த நிலையில் பிறந்தது கேள்வி
சீ.? நாகாத்தை அந்த இடத்தை விட்டு ஓடி விடுகின்றாள்....
கோயில் வீதியின் மத்தியில் குடை விரித்து நின்றது கூத்துக் களரி. பழைய காலம் போல் களரியைச் சுற்றி வாழைக் குற்றியில் பந்தம் எரியவில்லை. டியூப் பல்ப் புகள் தாம் எரிந்து கொண்டிருந்தன. களரியைச் சுற்றி மணல் தெரியாத அளவுக்கு ரசிக கோடிகள் குழுமியிருந்தனர்.
களரி உறங்காமல் இருப்பதற்காக மத்தாளம் கம்பீரமாகப் பேசியது அண்ணாவியாரும் அவரது கோஷ்டியினரும் எப்போதோ அரங்கேறிய கட்டுப்பெட்டி நாடகத்திலிருந்து நல்ல துள்ளல் மெட்டில் சில பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஈடுகொடுக்க முடியுமா இந்த மெட்டுக்கு?
கூத்து ஆரம்பமாகின்றது.
கட்டியக்காரன் களரிக்குள் குதிக்கின்றான். வெள்ளைச் சால்வையைத் திரையாக விரித்து, கட்டியக்காரனை மறைத்துப் பிடிக்கின்றனர் இருவர். பகல் வெற்றி கொழுத்தப்படுகின்றது. களரிக்கு வெளியில் சீன வெடி படபட வென்று முழங்குகின்றது. அண்ணாவியார் அற்புதமானதொரு தாளக்கட்டு வைக்கின்றார்.
மத்தளமும் முழங்க சல்லாரி ஒலிக்க காலில் கட்டிய சலங்கை கலீர் கலீர் என்று குலுங்கக் கட்டியக்காரன் என்ற பபூன் கூத்தாடுகின்றான். அண்ணாவியார் ஆட்டுவிக்க அவன் ஆடுகின்ற ஆட்டம் களரியில் கலகலப்பை ஏற்படுத்துகின்றது.
தாளக்கட்டு அமர்க்களம் ஓய்கின்றது. மறைந்திருந்த சால்வைத்திரை அகற்றப்படுகின்றது.
கட்டியக்காரன் வந்தான் கைதனில் பிடித்துக் கொண்டு.... என்று மேல் உச்சஸ்தாயியில் தம் பிடித்துப் பாடிக்கொண்டு களரியில் தாளம் பிசகாமல் ஆடி வருகின்றான் கட்டியக்காரன்.
அவனுடைய உறவினர்களும் நண்பர்களும் களரிக்குள் புகுந்து கழுத்தில் கடதாசி மாலைகளையும் தோளில் சால்வைகளையும் பரிசாகப் போட்டு மகிழ்கின்றனர். சிலர் அவனுடைய இடுப்பிலும் சால்வையைக் கட்டி விடுகின்றனர். கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள், பிளாக்ஸூக்குள்ளிருந்து கொஞ்சம் அம்பாரை யை ஊற்றிக் கொடுத்து கூத்துக் கலைஞர்களை உஷார்படுத்தவும் தவறவில்லை!
அதையடுத்து சுபத்திரை கல்யாணக் கதை ஆரம்பமாகின்றது. வில் விஜயன், பரந்தாமன், சுபத்திரை, சேடிப் பெண்கள் என்று கதாபாத்திரங்கள் களரியில் தோன்றுகின்றனர். அவர்களுக்கும் அதே வெள்ளைத் திரை மறைப்பு : பகல் வெற்றி, சீன வெடி முழக்கம் கடதாசி மாலை கௌரவம், சால்வை அணிவிப்பு, அண்ணாவியாரின் தாளக்கட்டு தொடர கூத்தின் மெயின் கதை ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு பாத்திரமும் தத்தம் வீரப் பிரதாபங்களைப் பாட்டிலும் ஆட்டத்திலும் காட்டிக் கொண்டு செல்கின்றனர்.
காட்சி மாறுகின்றது :-
அர்ஜூனன் தவக் கோலத்தில் வீற்றிருக்கின்றான். பன்றியொன்று குறுக்கிட்டு அவன் தவத்தைக் கலைக்க எத்தனிக்கின்றது. தவக்கோலத்திலிருந்து கண்விழித்த அர்ஜூனன் தன் காண்டீபத்தில் கணையைப் பொருத்தி பன்றி மீது குறி வைக்கிறான். திடீரென்று அந்தக் கணத்தில் தோன்றிய வேடன் ஒருவனும் அதே பன்றிக்குக் குறிவைத்து எய்கின்றான். இருவருடைய சரங்களும் ஏக காலத்தில் பன்றியின் உடலைத் துழைத்து அதன் உயிரை வாங்கி விடுகின்றன. யாருடைய அம்பினால் பன்றி இறந்தது? என்பதில் வேடனுக்கும், விஜயனுக்கும் தர்க்கம் பிறக்கின்றது. வாய்த் தர்க்கம் முற்றிக் கைகலப்பில் முடிகின்றது. இருவரும் ஒருவரை மோதிக் கொள்கின்றனர். விஜயனின் பிடியிலிருந்து வேடன் தப்புவதும், அந்த வேடனுக்குத் தன் வில் முறியுமட்டாக விஜயன் அடிப்பதும் பின்னால் அவனுடைய பக்தியையும் தீரத்தையும் வியந்து வேடனுருவில் வந்த சிவன் அவனுக்குப் பாஸ்பதம் தருவதும் கதை.
இங்கோ களரி யில் கதை முற்றாக மாறுகிறது.
வேடன் ஓடவுமில்லை. பாஸ்பதம் அருளவுமில்லை. சுருண்டு விழுந்தான். குருதி களரியில் பீறிட்டுப் பாயத் துடிதுடித்துப் புரண்டான். கூத்துக் களரி இரத்தக் களரியாயிற்று.
நாகாத்தையாக, நாகண்டாப் போடியை ஒரு வெறித் தனத்தில் பழி தீர்த்துக் கொண்டான் சரவணமுத்து! விடிய விடிய நடக்க வேண்டிய கூத்து அன்று பாதியிலேயே முடிந்தது.
நாகாண்டப்போடி உலக மேடையில் கூத்து ஆடுவதற்காகத் தான் போட்ட மனித வேஷத்தைக் கலைத்து விட்டு இந்த உலகத்தை விட்டே சென்று விட்டான்!
உலக மேடையில் கூத்தாடுவதற்காகப் புதிதாக ஒரு வேஷத்தைப் போட்டுக் கொண்டு நின்றான் சரவணமுத்து! அவன் ஏற்க இருக்கும் பாத்திரம் குற்றவாளி!
நாகாத்தையும் கூத்தாடத் தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றாள். அவள் ஏற்க இருக்கும் பாத்திரம் - கண்ணீர் நிறைந்தது!
Post a Comment