இராமாயணம் முழுவதும் கட்டுக்கதை என்ற கொள்கையுடையோரும் இக்காலத்தி;ல உளர். அவர்க்ள இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கையை ஒரு கற்பனை நாடாகக் கருதுவர். இராமாயணத்தைப் பற்றி ஜெர்மன் பாஷையில் ஓர் ஆராய்ச்சி நூல் எழுதிய ஜக்கோபி என்பவர், சீதை என்ற சொல் உழவுசால் எனப் பொருள்படுமாதலின், இராமாயணம் உழவுத் தொழிலை உருவகப்படுத்துவதற்கு எழுந்த காவியம் என்ற கூறினர். வேறு சில ஆராய்ச்சியாளர்கள் வட இந்தியாவிலிருந்து ஆரியர் விந்திய மலைக்குத் தெற்கே பரவிய வரலாற்றை இராமாயணம் விளக்குகிறதென்று கொள்வர்.
இராமாயணத்திற் சொல்லப்பட்ட செய்திகளில் ஓரளவு உண்மையுண்டென்ற கொள்கையுடைய மேனாட்டறிஞர்களில் பார்ஜிட்டர் ஒருவராவார். அவர் இந்தியாவிற் பல ஆண்டுகளாக உத்தியோகத்தில் அமர்ந்து, வடமொழி நூல்களிலுள்ள வரலாற்றுப் பகுதிகளைத் துருவி ஆராய்ந்தவர். இராமபிரான் சஞ்சரித்ததாக இராமாயணம் கூறும் இடங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையில், தென்னிந்தியாவுக்கு அணித்தாயுள்ள இலங்கையே இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கையாகும் என்று தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார். இதுவே பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலுள்ள மக்கள் மனதிற் பதிந்த கொள்கையாக இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்கள் இதைப்பற்றி ஐயம் நிகழ்த்தி வேறு கொள்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாராய்ச்சியாளர்களில் ஒருசாரார், இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கை இந்தியாவுக்கு அப்பால் வெகு தூரத்திலுள்ள ஜாவா, சுமாத்திரா பிரதேசம் என்பர். வேறு சிலர், சர்தார் கீபே என்பவரைப் பின்பற்றி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இலங்கை இருந்ததாகக் கருதுவர். இந்த இரண்டு கொள்கைகளும் பொருத்தமற்றனவாகத் தோன்றுகின்றன. சாவகத்தீவு என்று தமிழிலக்கியம் கூறும் ஜாவா முற்காலத்தில் யவத்வீபம் என்று வடமொழியில் வழங்கியது. வான்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்தில் யவத்வீபத்தை இலங்கையினின்று வேறுபட்ட பிரதேசமாகவே காட்டியுள்ளார். சுக்கிரீவன் கிழக்குத் திசையிலுள்ள நாடுகளைக் கூறும்போது இலங்கையையுங் குறிப்பிடுவதினின்று, இலங்கை யவத்வீபம் ஆகாதென்று வெள்ளிடைமலைபோல் விளங்கும். இனி, இலங்கை சமுத்திரமத்தியில் உள்ளதென்று வான்மீகி முனிவர் பன்முறையுங் கூறுகின்றார். சமுத்திரமல்லாத இடத்தில் இலங்கை இருந்ததாக சர்தார் கீபே எண்ணுவது வெறும் கற்பிதமாகும்.
இலங்கை என்று இப்பொழுது வழங்கப்படுகின்ற தீவே பல நூற்றாண்டுகளாக இப்பெயருடன் விளங்கிவருகின்றது. இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இந்நாடு இலங்கை என்றே வழங்கப்படுவது தமிழறிஞர் நன்கு தெரிந்ததாகும். அக்காலத்தில் இந்நாட்டை ஆண்ட மன்னனைக் 'கடல் சூழிலங்கைக் கயவாகு' என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டினின்று இந்நாட்டின் சரித்திரத்தைத் தொடர்ந்து கூறும் மஹாவம்சம் என்ற பழைய இதிகாசத்தில் இந்நாடு ஆதி முதல் அந்தம் வரையில் இலங்கை என்றே வழங்கப்படுகிறது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வட இந்தியாவினின்று இலங்கைக்கு வந்த விஜயன் என்ற அரச குமாரன் அக்காலத்தில் இலங்கையிலிருந்த யஷர்களுக்கு அரசியான குவேனியை மணந்த சரித்திரத்தை மஹாவம்சம் கூறுமிடத்து இலங்கையின் மலைப்பிரதேசத்தில் யஷர்களின் தலைநகரமாகிய இலங்காபுரி இருந்ததென்று குறிப்பிடுகின்றது. திரிகூட பர்வதம் என்ற மலையின் உச்சியில் விளங்கிய இலங்காபுரியை இராவணன் தனது தலைநகரமாகக் கொண்டிருந்தான் என்று இராமாயணம் கூறுவது ஈண்டு நினைவுகொள்ளத்தக்கது.
திரிகூடபர்வதத்தைப் பற்றி, கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டியன் குறிப்பிடும் ஒரு சாசனம் எமது ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவதாக உள்ளது. இச் சாசனம் சில ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு கிடைத்தது. பாண்டியப் பேரரசைத் தென்னிந்தியாவில் நாட்டிய ஜடா வர்மன் சுந்தர பாண்டியனது சகோதரனாகிய வீரபாண்டியன் இலங்கையை வென்றது சரித்திரப் பிரசித்தமான செய்தியாகும். இச் செய்தியை வீரபாண்டியன் தன் சாசனத்திற் கூறும்போது, தனது வெற்றிக்கு அடையாளமாகப் பாண்டிய அரசின் மீன் இலச்சினையை இலங்கையின் திருக்கோணமலையிலும், திரிகூட பர்வதத்திலும் பொறித்ததாக விவரிக்கின்றான். இலங்கைக்கு அப்பாலுள்ள புதுக்கோட்டையிற் கிடைத்த இச் சாசனத்தின் ஒரு பகுதி முற்றும் உண்மையான செய்தியாகும் என்பதற்கு இப்பொழுதும் இலங்கையிற் சான்று இருக்கின்றது. திருகோணமலையிலுள்ள கோட்டை வாசலில் இன்றும் இரட்டை மீன் இலச்சினை விளங்குவதைக் காணலாம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் போர்த்துக்கேயர் திருக்கோணமலையிலிருந்த சிவாலயத்தைத் தகர்த்த போதிலும் பாண்டிய இலச்சினைக் கல்வெட்டு அவர்களது கொடிய செயலினின்று தப்பி, இன்றும் சிதைவுபடாமலிருப்பது பெரிய விந்தையே, வீரபாண்டியன் திருக்கோணமலையின் மீன் இலச்சினை பொறித்தது உண்மையாயின், அவன் சாசனத்திற் கூறியவாறு, திரிகூடபர்வதத்திலும் அவ்விலச்சினையைப் பொறித்திருக்க வேண்டும். அவன் கூறும் திரிகூடபர்வதம் இலங்கையில் எப்பாகத்தில் உள்ளது? இதை யாம் அறிந்தால், இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கை இந்நாடுதான் என்று அறுதியிட்டுத் தீர்மானிக்கலாம்.
இந் நாட்டை இராமாயணத்துடன் சம்பந்தப்படுத்தும் பல ஜதிகங்கள் கர்ண பரம்பரையாக வழங்கிவருகின்றன. சீதாபிராட்டி சிறைவாசமிருந்த அசோகவனம் இந்நாட்டின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகிய ஹக்கலா என்ற இடத்தைச் சார்ந்ததென்று அங்குள்ள சாதாரண மக்கள் வாயினின்று இப்பொழுதுங் கேட்கலாம்.
இது சீதாதலாவா என்று கூறப்படும் இதற்கப்பால் சிறிது தூரத்திலுள்ள பாலுகமா என்ற இடம் அனுமானால் எரியுண்டதென்று சொல்லப்படுகின்றது. பாலுகமா என்பதன் பொருள் பாழடை;நத கிராமம் என்பதாம். இந்த இடத்திற் புற்பூண்டும் முளைப்பதில்லை. ஹக்கலாவிலிருந்து ஹப்புத்தளை என்ற இடத்திற்குப் போகிற வழியில் வெளிமட என்னும் அழகிய கிராமத்தின் பக்கத்தில் இராம லங்கா என்ற ஓரிடம் இருக்கின்றது. இங்கேதான் இராவணன் இறுதியாகப் போர்செய்து வீழ்ந்தான் என்றும், அது முதல் இவ்விடம் இராம லங்கா எனப் பெயர் பெற்றது என்றும், இங்குள்ள புத்தி பிக்குகள் ஒரு ஒரு கர்ண பரம்பரையான ஐதீகத்தைக் கூறுகின்றார்கள். இதற்கருகில் தூரும்வெலா பன்சாலா என்ற இடத்திற் சீதாபிராட்டி தன் கற்புநிலையினின்று தவறவில்லை என்று இராமபிரான் முன்னிலையிற் சத்தியஞ் செய்ததாக ஓர் ஐதீகம் வழங்கி வந்ததென்று மேஜர் போர்ப்ஸ் 1840ம் ஆண்டில் வெளியிட்ட இலங்கையிற் பதினோராண்டுகள் என்ற தமது புத்தகத்திற் கூறியுள்ளார். இவ்வாங்கிலேயப் படைவீரர் நூறு ஆண்டுகளுக்கு முன் அடர்ந்த காடுகள் செறிந்திருந்த இம் மலைப்பிரதேசத்திற் குதிரைமேற் சென்று பல இடங்களைப் பார்த்து ஆங்காங்கு இருந்த சிங்கள மக்கள் வாயிலாக இராமாயணம் சம்பந்தமான பல ஐதீகங்களைக் கேட்டு அவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றார். இம்மலைப்பிரதேசத்தில் இராவண எல்ல என்று ஒரு குன்று இருக்கின்றது. இதில் நீளமான ஒரு குகை உண்டு. இராவணன் தன் தலைநகரிலிருந்து அந்தரங்கமாக வெளிச்செல்வதற்கு இக்குகையை உபயோகித்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது.
மேற்கூறிய ஹக்கலா என்னும் இடத்தினின்று ஹப்புத்தளை என்னும் இடம் வரையிலுள்ள மலைப் பிரதேசம் எவருக்கும் எவருக்கும் வியப்பை உண்டாக்கக் கூடிய காட்சியைத் தருகின்றது. ஹக்கலாவினின்று பாலுகமாவுக்குச் சென்று, இம் மலைப் பிரதேசத்தின் உன்னதக் காட்சியை அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித மருட்கை உணர்ச்சி உண்டாகிறது. மூன்று பக்கங்களையும் அகன்ற பிரதேசமாக அது காணப்படுகின்றது. மூன்று பக்கங்களிலும் செங்குத்தாக ஏறக்குறைய ஐயாயிரம் அடி உயரமுள்ள மலைத் தொடர்கள் பயங்கரத் தோற்றத்துடன் எழுகின்றன. இவற்றிற்கிடையில் முப்பதுமைல் அளவு அகன்று ஒரு பதிந்த வள்ளம் போல விரிந்து கிடக்கின்றது. இதன் மத்தியில்தான் இராவணன் போர் செய்து வீழ்ந்த இடமெனப்படும் இராமலங்கா இருக்கிறது. இதன் எல்லைப்புறத்தில்தான் எரியுண்டதாகச் சொல்லப்படும் பாலுகமா இருக்கின்றது. இராமாயணத்தில் இலங்கையைப் பற்றிய வர்ணனைகளைப் படித்தவர்களுக்கு இதுதான் திரிகூட பர்வதமென்று ஓரையமின்றி உடனே தோன்றும்.
திரிகூட பர்வதத்தின் உச்சியில் இராவணனது தலைநகரமாகிய இலங்காபுரி விளங்கிற்றென்றும் இந்நகரம் நிலவில் ஆகாயத்தில் மிதப்பதுபோல் அநுமானுக்குத் தோன்றிற்றென்றும் இராமாயணம் கூறும். திரிகூட பர்வதத்தின் மூன்று பக்கங்களே இந்நகருக்கு இயற்கை மதில்களாக அமைந்திருந்தன. இக்காரணத்தால் இலங்காபுரியைப் பகைவர்கள் எவரும் அணுகமுடியாதென்று இராவணன் இறுமாந்திருந்தது வியப்பன்று. இப்பிரதேசத்தில் இப்பொழுதுள்ள பண்டாரவெலா, தீயத்தலாவா என்ற நகரங்களும் இரவில் ஆகாயத்தில் மிதப்பன போன்ற அழகிய காட்சியைத் தருகின்றன. இப்பிரதேசத்தின் தெற்கெல்லையாகிய ஹப்புத்தளையினின்று பகற்பொழுதில் தென்சமுத்திரத்தையும் அதன் பக்கத்தில் அம்பாந்தோட்டையிலுள்ள உப்பளத்தையும் பார்க்கலாம். இராமருடைய சேனை தென்சமுத்திரத்தின் கரையோரமாக வருவதை இராவணன் தன் தலைநகரிலிருந்து பார்த்தான் என்று இராமாயணம் கூறுவது இப்பிரதேசத்தின் அமைப்புக்குப் பொருத்தமாகவே உள்ளது. இராமருடைய சேனை தென்சமுத்திரத்திக் கரையிலுள்ள டொண்ட்ரா (தேவேந்திர நுவரா) என்ற இடத்திலிருந்து மலைப்பிரதேசத்திலுள்ள அலுத் நுவரா என்னும் இடத்துக்குத் தேவர்கள் விழாவைப்போல, சூரிய சந்திரக் கொடிகளுடன் அணிவகுத்துச் சென்றதென்று ஹெத்தார கோறளையைப் பற்றிய ஒரு பழைய சாசனங் கூறுகின்றது. இதனின்று இராமர் சேனை இலங்காபுரிக்குச் சென்ற சாசனங் கூறுகின்றது. இதனின்று இராமர் சேனை இலங்காபுரிக்குச் சென்ற வழியைப் பற்றி இங்கு ஓர் ஐதீகம் இருப்பது புலப்படும். மலைத் தொடர்களை மதில்களாகக் கொண்ட இலங்காபுரியை இவ் வழியினாலேதான் அணுகக்கூடுமென்பதை இராவணனது சகோதரனாகிய விபீஷணனிடமிருந்து உளவறிந்து இராமர் சேனை இவ் வழியாகச் சென்றதென்று யூகிக்கக் கூடும்.
அநுமான் இலங்காபுரியை அடைந்து சீதையைக் கண்டு பின் இராமரிடந் திரும்புங் காலத்தில், அரிஷ்ட பர்வதத்திற் சிறிது நேரம் தங்கியதாக வான்மீகி முனிவர் கூறுகின்றார். இப் பர்வதத்தைப் பற்றிய சான்று இந்நாட்டில் உள்ளது. அசோகன் மகனாகிய மஹிந்தன் தேவநம்பிய திஸ்ஸா என்ற இந்நாட்டு மன்னனைப் புத்த சமயத்துக்குத் திருப்பியபின், பௌத்த வழிபாட்டிற்குரிய இடங்களாகிய விஹாரங்கள் அநுராதபுரத்திலும் அதன் பக்கத்திலும் கட்டப்பட்டன. அவ் விஹாரங்களுள் ஒன்று அரிட்ட விஹாரம் என்று மகாவம்சம் கூறும். இவ் விஹாரம் இதற்கருகிலுள்ள ரிட்டிகலா என்ற மலையின் பெயரைத் தழுவியதாகும். கலா என்ற சிங்களச் சொல் மலையைக் குறிக்கும். அரிஷ்டம் என்ற சொல் அரிட்டம் என்று மருவி, பின் முதல் அகரம் காலகதியில் நழுவி, ரிட்டி என வந்ததென்று கூறப்படுகின்றது. இம்மலை இராமாயணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை இங்குள்ளவர் அறியாராயினும், இராமாயணம் கூறும் இலங்கை இந்நாடுதான் என்று நிச்சயித்தற்கு இம் மலையின் பெயர் ஓர் அரிய சான்றாக இருக்கின்றது.
இராவணன் வாழ்ந்த இடம் பாண்டிய நாட்டிற்கு எதிரில் இருந்ததாகச் சுக்கிரீவன் தன் சேனை வீரர்களுக்குக் குறிப்பிட்டதை வான்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 41ஆம் சர்க்கத்திற் காணலாம். அப்பகுதியின் மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றோம். அகஸ்திய முனிவரின் அநுக்கிரகம் பெற்று... மஹாநதியாகிய தாம்பரபரணியைக் கடப்பீர்களாக.. அங்கிருந்து நடப்பீர்களாயின், பாண்டிய நகர துவாரத்தில் சுவர்ண மயமாகிய முத்துக்களால் அலங்காரஞ் செய்யப்பெற்று நன்கு நிர்மிக்கப்பட்ட பொற்க வாடத்தைக் காண்பீர்கள். அங்கிருந்து சமுத்திரஞ் சென்று சீதையைத் தேடும்பொருட்டு சுமுத்ரத்தைத் தாண்டும் விஷயத்தை ஆலோசித்து நிச்சயித்துக் கொள்வீர்களாக. அங்கு சமுத்ரத்தினிடையில் அகஸ்தியரால் வைக்கப்பட்ட மகேந்திரம் என்னும் பர்வதம் இருக்கின்றது. அந்தச் சமுத்திர மத்தியில் இக்கரையின் நூறு யோசனை விஸ்தீரணமுடையதும் மனிதர்களுக்குப் போகமுடியாமல் மிக்க விளக்கமுற்றதுமாகிய ஒரு தீவு இருக்கின்றது. அந்தத் தீவு முழுமையுஞ் சீதாதேவியைத் தேடுங்கள். அந்தப் பிரதேசமே துர்ப்புத்தியும் வேவேந்திரனை நிகர்த்த தேஜஸூனுடையவனும் இராசதர்களுக்குப் பிரபுவும் நம்மால் வதைக்கத் தகுந்தவனுமாகிய இராவணனுக்கு வாசஸ்தானம் இங்கு பாண்டியருக்குப் பழைய தலைநகரமாயிருந்த கபாடபுரமும் அதனோடு தொடர்புற்ற மகேந்திர மலையும் குறிப்பிடப்பட்டுள்ளன. வான்மீகி முனிவர் இந்தச் சர்க்கத்திற் கூறியதையே தழுவிக் கம்பநாடரும்,
தென்றமிழ்நாட்ட டகன்பொதியிற் றிருமுனிவன்
தமிழ்ச்சங்கஞ் சேர்கிற்பீரேல்
என்றுமவ னுடைவிடமா மாதலினா
னம்மலையை யிறைஞ்சியேகிப்
பொன்றிணிந்த புனல்பெருகும் பொருநையெனுந்
திருநதியின் பொழியநாகக்
கன்றுவளர் தடஞ்சாரல் மகேந்திரமா
நெடுவரையுங் கடலுங்காண்டிர்
என்று செய்யுளியற்றியுள்ளார். கம்பர் காலத்துக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் வடமொழியில் இயற்றப்பட்ட சம்புராமாயணம் இலங்கையை சிம்ஹளத்வீபம் என்றே வெளிப்படையாகக் கூறுகின்றது.
தமிழ்நாட்டில் மிகப் பழைய காலந்தொட்டு இராமர் சேனை பாண்டிநாட்டைச் சார்ந்த சேதுவழியாகத்தான் சென்றது என்ற கொள்கை இருந்து வருவதற்கு ஒரு சான்று சங்க இலக்கியமாகிய அகநானூற்றில் 70ஆம் செய்யுளிற் காணப்படுகின்றது.
அது வருமாறு :-
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிவரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறை கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவிந் தன்றிவ் வழுங்கல் ஊரே
இராமர் பாண்டிநாட்டைச் சார்ந்த தனுஷ்கோடியில் ஓர் ஆலமரத்தின் கீழிலிருந்து இரகசிய ஆலோசனை நடத்திய செய்தி இங்கு கூறப்படுகின்றது. இச் செய்யுள் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்;டதாகும்.
தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள இராமேசுவரத்தில் இராமர் சிவபெருமானை வழிபட்டார் என்ற ஜதிகம் பன்னெடுங் காலமாகப் பரதகண்டம் முற்றிலும் வழங்கி வருகின்றது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த சுவாமிகள் இந்த ஜதிகத்தை இராமேசுவரப் பதிகத்திற் குறிப்பிட்டுள்ளார்கள்.
சேது என்ற பெயர் பிரசித்தமானது இச்சொல் அணையைக் குறிக்கும். தனுஷ்கோடியினின்று இராமரின் சேனை கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கு அணை கட்டியதாகச் சொல்லப்படுவதால், தனுஷ்கோடிக்கு இப்பெயர் மிகப் பழைய காலந்தொட்டு வழங்கி வருகின்றது. இவ்வணைக்குச் சான்றாக இப்பொழுதும் இவ்விடத்தினின்று இலங்கையைச் சேர்ந்த மன்னார்த் தீவுவரையில், மணல் திட்டுகளால் ஆகிய ஒரு தொடர் முப்பது மைல் தூரம் கடலிற் காணப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் ஆதாம் அணை என்று கூறுவர். இவ்வணையைப் பற்றி என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா என்ற பலபொருட் பேரகராதியிற் சில விவரங்களை அறியலாம். சில திட்டுகள் கடல் மட்டத்துக்கு மேலும், சில திட்டுகள் மூன்று அல்லது நாலடி ஆழத்துக்குக் கடலுள் அமிழ்ந்தும் இருக்கின்றன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இத் திட்டுகள் இடையீடின்றி ஒரே தொடராக இருந்தன என்றும், பின்னர் ஒரு கடுமையான புயல் வீசியபோது இவற்றில் இடையிடையே பிளவு ஏற்பட்டதென்றும் தெரியவருகின்றது. இயற்கையிலேயே அணை போல் இருந்த இம் மணல் திட்டுத் தொடரை ஒரு சேனை கடக்கத்தக்கதாக இராமரின் படைவீரர்கள் செய்தனரென்று கொள்ளுதல் தகும். இவ்வணை நூறு யோசனை தூரமிருந்தது என்று வான்மீகி முனிவர் கூறுவதைக் கணக்கிட்டு இது நானூறு மைலுக்கு மேற்பட்டதாகையால், இப்பொழுது இலங்கையென்று வழங்கப்படும் நாட்டிற்கும் இக் கணக்குப் பொருந்தாது என்று வாதிப்பார் உளர். வான்மீகி வேறுபல சந்தர்ப்பங்களிலும் காவிய ரீதியில் நூறு யோசனை என்ற பிரயோகத்தை அதிசயோத்தி அலங்காரமாய்ப் பன்முறை உயோகிக்கின்றபடியால், இங்கு நூறு யோசனையென்பது அதிக நீளத்தைக் குறிக்குமென்றே கொள்ள வேண்டும்.
மேற்கூறிய மணல் திட்டுகள் ஆரம்பிக்கும் இடமாகிய சேதுக் கரையைத்தான் வான்மீகி முனிவர் மஹேந்திர துவாரம் எனக் கூறினாரென்று யூகிக்க இடமுண்டு. மஹேந்திரமலை சேது நாட்டினின்று திருச்செந்தூர், கன்னியகுமாரி என்னும் இடங்கள் வரையில் பூமியில் அழுந்தியதாகச் சொல்லும் கந்தமாதனம் என்கின்ற மலைத்தொடரைக் குறிக்கும் எனக் கொள்வதற்கு ஆதாரமிருக்கிறது. கன்னியகுமாரியின் பக்கத்தில் மகேந்திரம் என்ற பெயருடன் ஒரு மலை இப்பொழுதும் உளது. சேது நாட்டிலுள்ள திருவுத்தர கோசமங்கையில் ஆகமம் வெளிப்படுத்தப்பட்டது என்ற திருவிளையாடல் ஜதிகத்தை மாணிக்கவாசக சுவாமிகள்,
மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமந் தோற்றுவிந் தருளியும்
என்று குறிப்பிடுவதால், மகேந்திரம் சேது நாட்டில் உள்ளது என்பது தெளிவாகின்றது.
இதுகாறுங் காட்டிய ஏதுக்களால், இப்பொழுது இலங்கை என்று வழங்கும் இந் நாடே இராமாயணத்திற் கூறப்பட்ட இலங்கை எனத் தீர்மானிக்கலாம். கிரேக்க பாஷையில் கிறீஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமர் என்ற மகாகவி இயற்றிய இலியடு என்னும் காவியத்திற் கூறப்பட்ட டிராய் என்ற நகரம் அக் கவிஞரின் கற்பனையே அன்றி உண்மையில் இருந்ததில்லை எனப் பல மேதாவிகள் கருதியதுண்டு. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் டிராய் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து அந் நகரத்தின் அமைப்பை நிரூபித்தனர். அதுபோல, இலங்காபுரி என்று இராமாயணத்திற் கூறப்பட்ட தலைநகரம் இந்நாட்டிற் பூர்வீக காலத்தில் இருந்ததென்று வருங்காலத்தில் நிரூபிக்கப்படும் என்று நம்புகின்றோம்.
x
Post a Comment