வித்துவான் க. வேந்தனார் அவர்கள் 1918ம் ஆண்டு யாழ்ப்பாணம் வேலனையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனகசபை நாகேந்திரம் என்பதாகும். இவர் தமிழ் ஆசிரியராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். இவர் எழுத்தாற்றல் பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கியவர். குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், தமிழ் உரைகள் எனப் பலவகையான ஆக்கங்களையும் படைத்துள்ளார். சோ. இளமுருகனார் என்பவரின் வழிகாட்டலில் தனித் தமிழில் இருந்த ஈடுபாடு காரணைமாக தனது பெயரை வேந்தனார் என மாற்றிக் கொண்டார். இவர் பூம்பொழில் (கவிதைகள்), இந்து சமயம் (பாடநூல்) திருநல்லூர், திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும், குழந்தை மொழி. சிறுவர் பாடல், தமிழ் கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய கவிஞன் எனும் கவிதை பாடப்பரப்பிற்குள் உள்ளடங்குகின்றது.
பாடுகின்றோர் எல்லோரும் கவிஞரல்லர்
பாட்டென்றால் பண்டிதர்க்கே உரிமையல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெடுத்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்குமாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்
பஞ்சணையில் வீற்றிருந்த பனுவல் பார்த்து
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்துபோகும்
கஞ்சியின்றி கந்தை சுற்றி வாழ்வானேனுங்
கனல்வீசி எரிமலைத்தீக் கக்கல்போல
விஞ்சுகின்ற சிந்தனையால் விழுங்கப்பட்டு
விருந்தளிக்கும் விறலோனே கவிஞனாவான்
கற்கண்டே செழுந்தேனே கனியேயென்று
கலகலப்பாய் சுவைப் பெயர்கள் கலந்து நல்ல
சொற்கொண்டு சொல்கின்ற கவிதையெல்லாஞ்
சொன்னவர்க்குந் தெரியாமல் தொலைந்து போகும்
விற்கொண்டு விடும் வீரன் அம்பு போல
விசை கூடும் அறிவுப்போர் வீறு தாங்கித்
தற்கொண்ட புலமைவெறிச் சொல்லாற் சான்றோன்
சாற்றுகின்ற கவிதையென்றுஞ் சாதலில்லை
அம்மானை திருப்பள்ளி எழுச்சி கோவை
அந்தாதி கலம்பகங்கள் பார்த்துப் பார்த்து
விம்மாற் பொருமாமற் கண்ணீர் விட்டு
விலைக்கு மாரடிக்கின்ற மெல்லியர் போல்
சும்மாயோர் உணர்வின்றிச் சொற்கள் கவிஞரல்லர்
தன்மானத் துள்ளொலியால் உலகை ஓம்புந்
தனியாற்றல் தாங்கி நிற்போர் கவிஞராவார்
பாட்டிற்கோர் புலவனென்றே தமிழ்நாடெங்கும்
பாராட்டும் பாரதியின் கவிதை ஆற்றல்
நாட்டிற்காம் விடுதலைப்போர் வெறியை ஊட்டி
நற்றமிழ்க்கும் மறுமலர்ச்சி நல்கக் கண்டோம்
வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கையின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்புவோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதினாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்.
Post a Comment