உழுதுவாழ்வோன் உணவின்றி
உடலும் சோர்ந்து துடிக்கின்றான்
அழுது வடித்த கண்ணீரை
அருந்தி நெஞ்சம் கவல்கின்றான்
கொழுத்த செல்வன் உழைப்பவனின்
குருதி குடித்து மகிழ்கின்றான்
பழுத்த அவனின் பெருவயிறு
பானையாகச் சிரிக்கிறது
ஆடை நெய்வோன் துண்டேனும்
அணிந்து கொள்ள வழியின்றிக்
கோடையோடும் குளிரோடும்
கோரச் சண்டை தொடுக்கின்றான்
மூடை வயிற்றுப் பெருஞ்செல்வன்
மூக்கு முட்ட உண்ட பின்னர்
கேடில் பட்டுத் துணியாலே
கையைத் துடைத்து மகிழ்கின்றான்
சேற்று மண்ணில் காலூன்றிச்
செய்ய உண்டி பலசெய்த
ஆற்றல் மிகுந்த தொழிலாளி
ஆன்ம நொந்து தவிக்கின்றான்
போற்ற அவனை யாருமில்லை
புரிய எவனும் இங்கில்லை
வேற்று மனிதன் அவனுயிரை
விழுங்கி ஏப்பம் விடுகின்றான்
சோடையுற்ற சொறிநாயாய்
சோம்பி நின்றது போதுமடா
பாடை ஏறிச் செல்லுமுன்னே
பானை வயிற்றுச் சீமானை
ஆடையின்றி அணியின்றி
அருந்தி மகிழ உணவின்றி
காடாக்கினியில் தள்ளிவிடக்
கரங்கள் கோர்த்தே எழுங்களடா
நோக்கம் இல்லாச் சீமான்கள்
நொந்து படையா வாழ்வுக்கோர்
ஆக்கம் செய்த கைகளினால்
அழிவு செய்ய எழுங்களடா
தாக்கமுற்ற இதயங்கள்
தீயாய் ஓங்கி அவர் வாழ்வைத்
தாக்கி மண்ணில் சாம்பரெனத்
தள்ளி விட்டே மலரட்டும்
கல்லை உடைத்து நெடுஞ்சாலை
கண்ட கைகள் சீமானின்
பல்லை உடைத்து வளர்கின்ற
பயிருக்கு எருவாய் போடட்டும்
நெல்லைக் கொண்ட அவர் மனையை
நெருப்பில் இட்டுக் கொழுத்தட்டும்
எல்லாம் உமதே நீரேதான்
இந்தப் புவியின் எசமானர்
Post a Comment