ஈழநாட்டுக்குறம் கவிதை - ப.கு சரவணபவன்


கவிஞர் ப.கு சரவணபவன் இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் பிறந்து வளர்ந்தார். இவர் 1909 – 1949 ஆண்டுகளில் சுமார் 40 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்து கல்விப் பணியாற்றியவர். இவரது தந்தையார் பெயர் பரமலிங்கம். அங்குள்ள தில்லையம்பலம் வித்தியாசாலையில் (தற்போதைய நாகபூசணி வித்தியாலயம்) கல்வி கற்று பின்னர் எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தி பெற்றவர். வித்துவ சிரோன்மணி கணேசையருக்கும், வேலனைத் தம்பு உபாத்தியாருக்கும் சிறந்த மாணவராக விளங்கியவர். கருவி நூல், முதல் நூல்களைக் கசடற கற்ற தமிழ் அறிஞர் அத்தோடு கவிபாடும் வல்லமையைப் பெற்றவர். 

1951இல் நயினாதீவு சனசமூக நிலைய வெளியீடாக இவரது கவிதைகள் அடங்கிய 'எடுத்த முத்துக்கள்;' எனும் சிறு நூல் வெளிவந்தது. நீண்டகாலம் வாழ்ந்து இருப்பின் சரவணபவனிடம் இருந்து உயிரோட்டமுள்ள பல கவிதைகளை தமிழ் உலகம் பெற்றிருக்கக் கூடும். இங்கு இவரது 'ஈழநாட்டுக் குறம்' எனும் தேச பற்றை எடுத்துக் காட்டும் 04 அடிகளைக் கொண்ட 07 பாடல்களைக் கொண்ட கவிதை அமைந்துள்ளது. 

தேவரெல்லாங் கொலுவிருக்கும் ஈழமெங்கள் தேயஞ்
செப்பிடுவே னதன்பெருமை சற்றிருந்து கேளும்
மூவரன்று பாடுதிருக் கோணமலை நாட்டில்
முத்தொதுக்கிக் கத்துகடல் சூழுமெங்கள் தேயம் (தேவர்)

எத்திசையும் போற்றுங்கதிர் காமமலை நாட்டில்
எங்கள்வள்ளி குடியிருக்கும் ஈழமெங்கள் தேயம்
புத்தபிரான் பொன்னடியாம் பொற்கமல பீடம்
பொலியுமலை எங்கள்மலை ஈழமெங்கள் தேயம் (தேவர்)

மாவலிகங் கைப்புனலாந் தாவணியை வீசி
மாதிரமெல் லாம்மணக்கும் வாசனையைப் பூசி
காவலரின் கண்மருட்டுங் கன்னிஎங்கள் தேயம்
காசினியி லிவளைப்போற் கன்னியில்லை யில்லை (தேவர்)

செந்தமிழுஞ் சிங்களமு மாயவிரு தோழி
சேவைசெய்யும் இராசகன்னி ஈழமெங்கள் தேயம்
இந்தியரெம் அக்கைமக்கள் என்றணைக்கும் அம்மை
வந்தனையல் லாதெமக்குச் சிந்தனைவே றில்லை (தேவர்)

பொற்புதையல் கண்டெடுப்பார் போலச்சில மந்தி
பூமியுள்வெ டித்தபலாப் பொற்சுளையைக் கிண்டும்
நற்குணங்கொள் மங்கையரும் மைந்தர்களும் போல
நாலுகின்ற பூங்கொடியில் ஊசல்சில வாடும் (தேவர்)

மானின்கவைக் கொம்பெடுத்துக் கால்களென நாட்டி
வளமான பன்றிமுள்ளுக் கைம்மரங்களை பாய்ச்சி
கானிலுதிர் மாமயிலின் தோகைகொண்டு வேய்ந்து
கட்டியத னுள்ளிலிருந்து சிற்றில்சில வாடும் (தேவர்)

கனிபெறவென் றொருகுறத்தி காதணியை வீசக்
கடுவனதைக் கைப்பிடித்துக் காதலிதன் காதில்
நனியழுத்தக் கண்ணினின்று நீர்வடியும் வாயில்
நகைவருமக் குரங்கிருக்கும் ஈழமெங்கள் தேயம் (தேவர்)


Post a Comment

0 Comments