அறிமுகம் :-
பண்டிதமணி மு. நல்லதம்பி அவர்கள் ஈழத்து தமிழ் புலவர்களிலே தனக்கென்று தனியாக ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையின் சிவன் கோயிலடி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் முருகுப்பிள்ளை தங்கம்மா ஆகியோருக்கு 1896.09.13ம் திகதி மகனாகப் பிறந்தார். பண்டிதமணி ச. கந்தையாப்பிள்ளை என்பவரிடம் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேறியவர். இளமையில் கவிபாடும் ஆற்றலும் நாடகம் நடிக்கும் ஆர்வமும் இவரிடம் காணப்பட்டன. இவர் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக தமது கல்விப் பணியினைத் தொடங்கியவர். இவரின் கவியாற்றலையும், தமிழ்ப் பணியையும் பாராட்டி தமிழ்நாடு திருநெல்வேலி தமிழ்ச் சங்கத்தார் 1940ம் ஆண்டு 'முத்தமிழ்ப் புலவர்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். இவ்வாறு தமிழுக்கும் தமிழ் கவிதை உலகிற்கும் அரும்பணியாற்றி 1981.05.08 அன்று தன்னுடைய 55வது வயதில் இறைபதம் அடைந்தார்.
பாரதியாரால் கவரப்பட்டவர்கள் தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பலர் உள்ளனர். அவ்வாறு கவரப்பட்டவர்களில் ஒருவரே மு. நல்லதம்பி புலவராவார். இவர் இயற்றிய சிறுவர்களின் பாடல் தொகுப்பாக 'இளைஞர் விருந்து' எனும் நூல் விளங்குகின்றது. இந்நூல் நல்லதம்பி அவர்களின் மரணத்திற்குப் பின் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. இந்நூலில் 'பெரியார்' என்ற தலைப்பின் கீழ் பாரதியார் பற்றிய பாடல்களில் 'பாரதியார்' என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதை மு. நல்லதம்பி அவர்கள் பாரதியார் மீதும் அவரது பாடல்கள் மீதும் கொண்டிருந்த ஆழமான பக்தி உணர்வினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பாரதி யென்றொரு தாமரை பூத்தது
பாரத நாடெனும் வாவியிலே – அதன்
சீரித ழாயிரஞ் செங்கதிர் போலொளி
செய்து விளங்குது பூமியிலே
இந்த நறுமலர் கூம்பிடுமோ இதன்
இன்பம் என்றாயினும் குன்றிடுமோ – உயர்
சிந்தனை யாமெனும் வானுலகேறித்
திளைத்திடலாமது சாம்பிடுமோ (பாரதி)
சந்தமிகுந்திடுது சிந்தென வந்தது
சாரலருவிகள் போல் விழுந்தே – தமிழ்ச்
சிந்தையுருக்குது செம்மை பெருக்குது
சித்திரங் காட்டுது புத்துயிர் போல் (பாரதி)
தாமரைக் காடிது நித்தலுஞ் செந்தமிழ்த்
தண்ணற வெங்குஞ் சொரிவது பார் - பல
காமரு பாவலராகிய வண்டினங்
கண்டன மண்டிக் களித்திடல் பார் (பாரதி)
புத்தப் புதிய சுவையிது முன்னொரு
பூக்களு மிச்சுவை தந்ததில்லை – மெத்த
மெத்த வெறிக்குது காதல் சிறக்குது
வீரம்பிறக்குது நேரினிலே (பாரதி)
முல்லை குறிஞ்சி யிளமருதம் நல்ல
மோகனப்பாலை முதிர்ந்த நெய்தல் - பண்கள்
கல்லையுருக்க முரன்று முரன்று
கவிக்கணி கூட்டிடல் கண்டிடுவாய் (பாரதி)
மாடு மரங்களு மிச்சுவை கேட்டிங்கு
வண்டு களாகி மயங்குதல் பார் - அது
காடு துறக்குது கோடை தணிக்குது
கானல் பறிக்குது கண்ணனென்றே (பாரதி)
Post a Comment