உளவியல் என்பது மனிதனுடைய அல்லது உயிரியினுடைய நடத்தைகளையும் சிந்தனை செயற்பாட்டினையும் விளக்கும் விஞ்ஞானம் உளவியலாகும். சிறுவர் உளவியலானது இன்று சமூகத்தின் தேவை கருதி ஒரு தனித்துறையாக வளர்ச்சி கண்டு வருகின்றது. தற்காலத்தில் சிறுவர் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு அவசியம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகின்றது. சிறுவர் உளவியல் சிறுவர்களின் கற்பித்தலை பயனுடையதாக்குவதோடு மாணவர்கள் மனதில் கற்ற விடயங்கள் நிலைத்திருப்பதற்கும் உதவுகின்றது. சிறுவர்களின் தன்மை, கற்றல் செயற்பாட்டின் இயல்புகள், கற்றலுக்கு ஏற்ற சூழல் என்பன பற்றி சிறுவர் உளவியல் ஆராய்கின்றது.
ஒரு குழந்தை கருவுற்ற காலம் முதல் முதிர்ச்சி வரையான விடயங்களை பற்றி ஆராயும் குழந்தை உளவியல் குழந்தைகளின் உலகம் எனக் கருதப்படுகின்றது. இக்குழந்தை உளவியல் பல்வேறு வகையான வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைகின்றது.
- உடல் மேம்பாடு
- உள மேம்பாடு
- மனவெழுச்சி மேம்பாடு
- மொழித்திறன் மேம்பாடு
- ஆக்கத்திறன் மேம்பாடு
- அழகியல் மேம்பாடு
- சமூக மேம்பாடு
- அறவொழுக்க மேம்பாடு
போன்ற வளர்ச்சிகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
ஒரு குழந்தையின் பிறப்பின் பின்னர் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களை குழந்தை உளவியல் ஆராய்கின்றது. எதிர்காலச் சமூகத்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் குழந்தை உளவியலின் முக்கியத்துவத்தை இன்று உளவியலாளர்கள் உணர்ந்துள்ளார்கள்.
தற்காலத்தில் குழந்தை உளவியல் பற்றி அறிவு இல்லாத ஒருவர் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருக்கக் கூடாது என்ற அறிவுரைக்கேற்ப உளவியல் அறிவின் முக்கியத்துவம் புலனாகிறது. குழந்தையின் ஒவ்வொரு செயற்பாடும் அவதானிக்கப்பட வேண்டியது அவசியமாகும். குழந்தைகள் எப்போதும் தனித்துவமானவர்கள், அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் உண்டு. இதனால் பெற்றோர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் வெகு உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். எனவே அவர்களின் உள்ளத்தைப் புரிந்து செயற்படுவது மிக முக்கியமானதாகும்.
குழந்தை உளவியல் தொடர்பாக பல உளவியலாளர்களின் கருத்துக்கள் காலத்திற்கு காலம் வெளியிடப்பட்டன.
அவை
ஜோன் லொக் (1632 – 1704) : குழந்தைகள் வளர்ந்தோரிலும் பார்க்க பெரிதளவிலும் வேறுபட்டவர்கள். இதனால் அவர்களுக்கென்று விசேடமான கல்வி முறை இருக்க வேண்டும்; என்கிறார்.
ஜீன் ஜக்ஸ் ரூசோ (1712 – 1778) குழந்தைகளின் தனித்தன்மையை மதித்து அவர்களுக்கு இயற்கையோடு இணைந்து கற்பித்தல் சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தார்.
மரியா மொன்ரிசோரி அம்மையார் (1870 – 1952) : குழந்தை உளவியல் தொடர்பான கருத்துக்கள் இன்று பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. பவ்லோவ் (1849 – 1936) மற்றும் வாற்சன் (1878 – 1958) போன்றோர்களினது பரிசோதனைகளும் அணுகுமுறைகளும் குழந்தை உளவியலிலும் கல்வியிலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்தின. சிக்மன் பிரய்ட் (1859 – 1939) குழந்தைகள் தொடர்பான பல ஆராய்ச்சி மூலம் பல கருத்துக்களை வெளியிட்டார். மாக்சிச சிந்தனையாளர்களாகிய கார்ல்மாக்ஸ், லெனின், மாஓசேதுங் போன்றோரின் தீவிர அரசியற் செயற்பாடுகள் குழந்தை உளவியலை மறுசீரமைப்பதற்கு பெரும் உதவி புரிந்துள்ளன.
மாறிவரும் இவ்வுலகில் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போன்று குழந்தை உளவியல் தொடர்பான கருத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. ஒரு குழந்தை கருவுற்ற காலம் தொடக்கம் பிள்ளையின் கட்டிளமைப் பருவம் வரையிலான பிள்ளையின் வளர்ச்சி, விருத்தி, அதன் செயற்பாடுகள், நடத்தை, கற்றல் செயற்பாடுகள், சமூக ஈடுபாடு போன்ற சகல செயற்பாடுகளும் இக் குழந்தை உளவியலினுள் அடங்கும்.
பிள்ளை ஒன்றின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்க்கை, தாயின் கர்ப்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. கர்ப்பமடைந்த தாயின் நலமும், நடத்தையும் குழந்தையின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதன் காரணமாக தற்கால அரசு தாய், சேய் நலன் கருதி இலவச சுகாதார அறிவுரைகள், இலவச மருத்துவ வசதிகள் போன்ற நாடெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன.
குழந்தையின் பிறப்பின் போது கூட அவர்களின் உடல், உளம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே உளவியலாளர்கள் அனைவரினதும் கருத்தாகும். இவ்வாறான பல கருத்துக்களை முன்வைத்த ப்ரொயிட், கெஸல், பவ்லொவ், ஸ்கின்னர், வஸ்டன், மில்லர், பியாஜே போன்றவர்களின் உளவியல் கருத்துக்கள் தற்காலத்திலும் செல்வாக்குச் செலுத்துவதை காணமுடிகின்றது.
Post a Comment