importance of preschool / முன்பள்ளிக் கல்வியின் அவசியம் - கட்டுரை


மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் முறைசார்ந்த வகையில் ஆரம்பிக்கும் இடமாக முன்பள்ளிகள் அமைகின்றன என்றால் மிகையாகாது. குறித்த மாணவனுக்கு முதலாவது ஆசிரியராக அமைபவர் பெரும்பாலும் தாயாக அமையப்பெறினும் ஏனைய சகபாடிகளுடன் இணைந்து கற்றலுக்கு வழிகாட்டும் முதலாவது ஆசிரியராக முன்பள்ளிக் கல்வியின் ஆசிரியரை பசுமையாக நினைவில் வைத்துக் கொள்வான். 

பண்டைய காலங்களுடன் ஒப்பிடுகையில் என்றுமில்லாதவாறு முன்பள்ளிக் கல்வி நிலையங்கள் அதிகம் தோற்றம் பெற்று இயங்கிவருகிறது. தனியார்களினால் தமது தொழில் தேவைகள் மற்றும் அயலவர்களின், நண்பர்களின், மற்றும் தனது பிள்ளைகளின் கல்வி வசதிகள் வழங்கல், பொழுதுபோக்கு போன்ற தேவைகளை முன்வைத்து பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னரான குழுநிலை வசதிகள் வழங்கப்பட்டன. 

இவை முன்பள்ளிப் பாடசாலைகளாகப் பரிணாமம் அடைந்து அவற்றில் குழந்தை பராமரிப்புடன் கல்வியறிவைப் போதிக்கும் நோக்கத்துடன் மாற்றமடைந்தது. நாளாவட்டத்தில் இக்கட்டமைப்பின்; தேவை பல்கிப் பெருகின. கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் அரசின் கவனம் முன்பள்ளிகளின் தேவையை உணரச்செய்தது. பாடசாலைக் கல்விக்கான அத்திவாரமாக முன்பள்ளிக் கல்வி அமைகிறது. கல்வி உளவியளாளர்கள், தத்துவவியளாளர்களின் கருத்துப்படி மனித மூளையின் மிக முக்கிய வளர்ச்சிப் பருவம் குழந்தைக் கருவிலுள்ள நிலையிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைகிறது. பிள்ளையின் மீது பெற்றோரும் ஆசிரியரும் வெளிப்படுத்தும் கரிசனையில்தான் குழந்தையின் உடல்,உள,சமூக அபிவிருத்தி தங்கியுள்ளதாக உளவியளாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் ஆரம்ப காலங்களில் நகரங்களில் ஆரம்பித்த முன்பள்ளிகள் இன்;று நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இது முன்பள்ளிக் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்துகிறது. இப்பள்ளிகள் போதிய வளங்களுடனும் எதிர்பார்க்கும் முகாமைத்துவ ஆற்றல்களுடனும் இயங்குவது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படல் வேண்டும்.

இதற்காக முன்பள்ளிகளைக் கவனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பள்ளிக் கல்வியானது முன்பள்ளிக் கல்வித்தத்துவத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படல் வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளின் அனுபவங்களை உள்வாங்கிச் செயற்படுதல் நன்று. நேரடிக் கண்காணிப்பு , முறையியலை பின்பற்றச் செய்தல் , விளையாட்டுடன் கூடிய கல்விச் செயற்பாடுகள் , பெற்றோர்களை விளிப்பூட்டுதல் , அடிக்கடி மாணவர்களின் ஆற்றுகைகளை காட்சிப்படுத்தி மாணவர்களின் சமூக இசைவாக்கம். ஆளுமையை மேம்படுத்தல் போன்ற பயனுறுதி கொண்ட மகிழ்வூட்டும் பாடசாலையாக மாணவனுக்கு உணரச்செய்யும் களமாக இவை அமைதல் வேண்டும். 

குழந்தை தமது இயல்பான வேகத்தில் தமது இயலுமைகளுக்கேற்ப இயங்கிக் கற்க வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாகிறது. கற்றல் சூழல் வீட்டுச் சூழலுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். முன்பள்ளிக் கல்வியானது 5 ஆரம்பக் கல்வி பரப்புகளில் கவனம் செலுத்துகிறது. 

நடைமுறை வாழ்க்கைக்கான பயிற்சிகள்-தனக்கான இயலுமைகேற்ப சூழலில் செயற்பட்டு சுதந்திரமான உணர்வைப் பெற்று தன்னை உணர்தல்சமூக இசைவாக்கம் பெறதலாக அமையும்.இதற்காக நாளாந்த செயற்பாடுகளில்

எவ்வாறு காலணிகளைப் பயன்படுத்துவது,  கைகளுவுதல் சிற்றூண்டிகளை உண்ணுதல், ஏனையவர்களுடன் பகிர்தல், சுத்தமாக்குதல் போன்ற விடயங்களில் வழிகாட்டப்படும்.

உணர்வு அல்லது புலன்களைப் பயன்டுத்தல்-புலன்களிற்கான பயிற்சியளித்தல் மூலம் பார்த்தல் , கேட்டல் , தொடுதல் , கிரகித்தல் போன்ற திறன்களை விருத்தி செய்வதற்கான வழிகாட்டல்களை செயற்படுத்தி அவர்களின் அறிவு வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்குகின்றன. மொழி வளர்ச்சி – பொருத்தமான வழிகாட்டல்கள் மூலம் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

அதற்கான முதற் கட்டமாக நாளாந்தம் பயன்படுத்தும் சிறு சொற்களின் உச்சரிப்புக்களை அறியச்செய்தல் , எழுத்தின் மேல் வரைதல், வாசித்தல் ,கதை கூறல் , சித்திரங்களில் இருந்து கதைகளை உருவாக்கல், சம்பவங்களை தொகுத்து கூறல் , 4 வயதின் பின் எழுத ஆரம்பித்தல் என்றவாறு படிப்படியாக மொழித்திறன் வளர்க்கப்படுகிறது. இவ்வாறாக குழந்தைகளை ஆரம்ப கல்விக்கு தயார்படுத்தும் பயிற்சி நிலையமாக முன்பள்ளிகள் அமைகின்றன.

இவ்வாறு மாணவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் முன்பள்ளிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயற்படுவது பெற்றோர்களின் கடமையாகும். எனவே நாளைய தலைமுறையை நல்வழிப்படுத்துவோம். 



Post a Comment

Previous Post Next Post